கரும்பு விவசாயிகளுடன் குமாரசாமி இன்று பேச்சுவார்த்தை 15 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்ற மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

விதானசவுதாவை முற்றுகையிட பெங்களூருவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள்திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகளை 15 நாட்களில் நிறைவேற்ற மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2018-11-20 00:01 GMT
பெங்களூரு,

இதுதொடர்பாக கரும்பு விவசாயிகளுடன் குமாரசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்து கிறார்.

கர்நாடகத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த கரும்புகளுக்கு சர்க்கரை ஆலைகள் பணம் வழங்காமல் பாக்கி வைத்துள்ளன. சர்க்கரை ஆலைகளிடம் இருந்து நிலுவைத்தொகையை பெற்றுத்தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த விவசாயிகளுடன், முதல்-மந்திரி குமாரசாமி பெலகாவியில் நேற்று பேச்சு வார்த்தை நடத்துவதாக அறிவித்திருந்தார். பின்னர் அந்த பேச்சுவார்த்தையை பெலகாவியில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றியதுடன், நேற்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை இன்று(செவ்வாய்க்கிழமை) மாற்றப்பட்டுள்ளது.

பெலகாவியில் நடைபெற இருந்த பேச்சு வார்த்தையை பெங்களூருவுக்கு மாற்றியதை கண்டித்தும், சர்க்கரை ஆலைகளிடம் இருந்து நிலுவைத்தொகையை பெற்றுத்தரக்கோரியும் நேற்று முன்தினம் பெலகாவி சுவர்ணசவுதாவுக்குள் கரும்பு லாரிகளுடன் நுழைந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை ரவுடிகள் என்றும், கொள்ளையர்கள் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி கூறி இருந்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் விவசாயி பற்றி சர்ச்சைக்குரிய விதமாகவும் குமாரசாமி பேசி இருந்தார். முதல்-மந்திரி குமாரசாமியின் பேச்சுக்கு விவசாய சங்கங்கள், பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

அத்துடன் பெண் விவசாயி பற்றி சர்ச்சைக்குரிய விதமாக பேசியதற்கு முதல்-மந்திரி குமாரசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூரு விதானசவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதற்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் ரெயில்கள் மூலமாக நேற்று காலையில் பெங்களூருவுக்கு திரண்டு வந்தார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அந்த விவசாயிகள் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து விதானசவுதாவை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டார்கள். ஊர்வலமாக வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் சுதந்திர பூங்காவுக்கு சென்றார்கள். பின்னர் அங்கு வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள், விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் பெண் விவசாயி குறித்து பேசிய குமாரசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோஷமிட்டனர்.

அத்துடன் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசுவதற்காக சுதந்திர பூங்காவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி வர வேண்டும், இல்லையெனில் போராட்டத்தை கைவிட போவதில்லை என்று விவசாயிகள் கூறினார்கள். மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாநிலம் முழுவதும் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தார்கள். இதையடுத்து, சுதந்திர பூங்காவுக்கு கூட்டுறவுத்துறை மந்திரி பண்டப்பா காசம்பூர் விரைந்து வந்தார். மேலும் மந்திரிசபை கூட்டம் நடைபெற இருப்பதால் முதல்-மந்திரியால் வர முடியவில்லை என்றும், அவருக்கு பதிலாக தான் வந்திருப்பதாகவும் மந்திரி பண்டப்பா காசம்பூர் விவசாயிகளிடம் கூறினார்.

ஆனால் முதல்-மந்திரி குமாரசாமி இங்கு வரவேண்டும், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று விவசாயிகள் கூறினார்கள். மேலும் முதல்-மந்திரி குமாரசாமிக்கு பதில் தான் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் மந்திரி பண்டப்பா காசம்பூர் கூறினார். இதனை ஏற்க விவசாயிகள் மறுத்து விட்டார்கள். அதே நேரத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்-மந்திரி தயாராக இருப்பதாகவும், அதனால் போராட்டத்தை கைவிடும் படியும் மந்திரி பண்டப்பா காசம்பூர் கூறினார். அத்துடன் கரும்பு விவசாயிகளுடன் நாளை (அதாவது இன்று) முதல்-மந்திரி பேச்சு வார்த்தை நடத்துவதுடன், சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து நிலுவைத்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் விவசாயிகளுடன் மந்திரி பண்டப்பா காசம்பூர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பின்னர் மந்திரிசபை கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் சுதந்திர பூங்காவில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதையடுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகள் 15 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் கரும்பு விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது பிரச்சினைகளை தீர்க்கவும் மந்திரிசபையில் முடிவு எடுக்கப்பட்டது.

இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினரிடம் அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக முதல்-மந்திரி குமாரசாமியும் உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து, விதானசவுதாவை முற்றுகையிடும் போராட்டத்தை வாபஸ்பெற்று சுதந்திர பூங்காவில் இருந்து விவசாயிகள் கலைந்து சென்றார்கள். விதானசவுதாவை முற்றுகையிட ஆயிரக்கணக்கான விவசாயிகள் சுதந்திரபூங்காவுக்கு திரண்டு வந்ததால், சிட்டி ரெயில் நிலையம், சுதந்திரபூங்காவை சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை கொடுக்காமல் ரூ.2 ஆயிரம் கோடி வரை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கரும்பு விவசாயிகளுடன் பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12.30 மணியளவில் முதல்-மந்திரி குமாரசாமி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த பேச்சு வார்த்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கான பயணச்செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்