அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வாலிபர் சங்கத்தினர் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் வட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று சங்கராபுரம்-பூட்டை சாலையில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு உடனே உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரியும், சங்கராபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குடிநீர், மின்விளக்கு, கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், டெங்கு, மலேரியா மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க கொசு மருந்து அடிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும். மருத்துவ முகாம் நடத்திட வேண்டும்.
அனைத்து கிராமங்களிலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்திற்கு வட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏழுமலை, வட்ட பொருளாளர் பிரபாகரன், வட்ட துணை தலைவர்கள் முரளி, முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்கள், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாநிதி, ரேச்சல் கலைச்செல்வி ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.