தூத்துக்குடி அருகே 16-ம் நூற்றாண்டு சதிக்கல் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி அருகே மேலசெக்காரக்குடியில் 16-ம் நூற்றாண்டு சதிக் கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியை அடுத்த 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேலசெக்காரக்குடி கிராமம். இந்த ஊரில் 2 சதிக்கற்களை தொல்லியல் ஆய்வாளரும், நெல்லை நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியருமான ஈ.சங்கரநாராயணன் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது:-
கணவன் இறந்த உடன் அவனை எரிப்பதற்காக மூட்டப்படும் தீயில் விழுந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் பெண்களுக்காக எடுக்கப்பட்ட நினைவுக்கல்லே சதிக்கல் என்று அழைக்கப்படுகிறது. அப்படி செய்யும் போது, அவளுடைய கணவன் பெரும் பாவம் செய்தவனாக இருந்தாலும், மனைவியுடன் அவனும் சொர்க்கத்துக்கு சென்று விடுவான் என்றும், அவள் அருந்ததிக்கு சமமாக இருப்பாள் என்றும் இடைக்காலத்தில் நம்பிக்கை ஊட்டப்பட்டது.
அவளின் நினைவாக கணவனின் உருவத்தோடு கல்லில் சிற்பமாக செதுக்கி வைத்தனர். இதனை சதிக்கல், மாசதிக்கல் என்று பலவாறாக கூறுவார்கள். அவளை சமுதாயம் தெய்வமாக போற்றி வணங்கியது. இன்றும் தீய்ப்பாய்ந்த அம்மன் (தீப்பாச்சி அம்மன்) என்ற பெயரிலும், மாலையிட்ட அம்மன் என்ற பெயரிலும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
மேலசெக்காரக்குடி குளத்தின் நடுப்பகுதியில் 16-வது நூற்றாண்டை சேர்ந்த முதலாவது சதிக்கல் அமைந்துள்ளது. ஆணும், பெண்ணும் அமர்ந்த நிலையில் இந்த கல் அமைக்கப்பட்டு உள்ளது. ஆண் உருவம் வலப்புறமும், பெண் உருவம் ஆணின் இடப்புறமும் உள்ளது. ஆண் உருவம் இடது காலை தொங்கவிட்டு, வலது காலை மடித்து அமர்ந்துள்ளது. வலது கை மேல்நோக்கி வாள் பிடித்தவாறு காட்டப்பட்டு உள்ளது. இடது கை தொடை மீது அமர்த்தி காட்டப்பட்டு உள்ளது. காலில் வீரக்கழலும், காதில் காதணிகளும் செதுக்கப்பட்டு உள்ளன.
பெண் உருவமும் இடது காலை மடித்து, வலது கால் தொங்க விட்டவாறு உள்ளது. இடது கை மலர்ச் செண்டை பிடித்தவாறு வளையல்களும், கால்களில் தண்டையும் காணப்படுகிறது. ஆண், பெண் உருவங்களுக்கு மேலே இருவரும் சொர்க்கம் செல்லும் காட்சியும் அழகாக செதுக்கப்பட்டு உள்ளன. மேலும் உருவங்களுக்கு மேல் பகுதியில் கல்லின் முன்பக்கத்தில் தொடங்கி இரு பக்கங்களில் 16-வது நூற்றாண்டு எழுத்துடன் கல்வெட்டு காணப்படுகிறது. தேவி என்று தொடங்கும் இந்த கல்வெட்டு மேலும் படிக்க முடியாத அளவுக்கு தேய்ந்த நிலையில் உள்ளது. எனவே, இந்த கல் 16-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.
இதுதவிர 17-ம் நூற்றாண்டில் அமைந்த மற்றொரு சதிக்கல் மேல செக்காரக்குடி குளத்தின் தென் மேற்கு கரையில் சீவலப்பேரி செல்லும் ரோட்டின் வடபுறத்தில் அமைந்துள்ளது. கொடுங்கை வெட்டப்பட்ட நிலையில் செதுக்கப்பட்டு உள்ள இந்த சதிக்கல்லில் ஆண், பெண் உருவங்கள் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டு உள்ளன. ஆண் உருவம் வலது புறமும், பெண் உருவம் ஆணின் இடப்புறமும் காட்டப்பட்டு உள்ளன. ஆண், பெண் ஆகிய 2 உருவங்களும் வலது காலை தொங்க விட்டு, இடது காலை மடித்து அமர்ந்த நிலையிலும் இரு கைகளும் இணைந்து கூப்பிய நிலையிலும் காட்டப்பட்டு உள்ளன.
குளத்தின் தென் மேற்கு கரையில் ரோட்டின் வடபுறத்தில் உள்ள சதிக்கல்லின் அருகில் ஒரு பெருவழிக்கல் அமைந்துள்ளது. இது அங்குள்ள அரண்மனை பகுதியில் ஏற்கனவே முந்தைய ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்ட 16-ம் நூற்றாண்டை சேர்ந்த 4 புறமும் போர்க்காட்சிகளையும், தேய்ந்த நிலையில் படிக்க முடியாத அளவிலான எழுத்துக்களையும் உடைய அடுக்கு நிலை நடுக்கல் ஒன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலத்தில் அண்மை காலமான 1990-ம் ஆண்டு வரை இந்த பகுதியில் இறந்தவர்களுக்கு நினைவுக்கல் எடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. இதனை நடு செக்காரக்குடியில் காணப்படும் நினைவு கற்கள் மூலம் அறிய முடிகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.