புயலால் பாதிக்கப்பட்ட காரைக்காலில் 80 சதவீத சீரமைப்பு பணிகள் நிறைவு - அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புயலால் பாதிக்கப்பட்ட காரைக்காலில் சீரமைப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

Update: 2018-11-19 23:30 GMT

புதுச்சேரி,

புதுவை பொதுப்பணித்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

கஜா புயலுக்கு காரைக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ஒருவர் மட்டும் காலில் காயம் அடைந்தார். சுமார் 300 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

அவற்றை சீரமைத்து மின்சாரம் வழங்கும் பணியை மேற்கொள்ள புதுச்சேரியில் இருந்தும் மின்துறை ஊழியர்கள் காரைக்கால் சென்றுள்ளனர். அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்காலிலேயே முகாமிட்டு பணிகளை செய்து வருகிறார். ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு தொடர்ந்து குடிநீர் சப்ளை நடக்கிறது.

காரைக்காலில் சீரமைப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டன. ஒட்டுமொத்த சேதத்தை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு காரைக்கால் கலெக்டரை கேட்டுள்ளோம். அந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

அரசின் வேண்டுகோளை ஏற்று ஒரு வாரமாக புதுவை மற்றும் காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. எனவே அவர்களுக்கும் நிவாரணம் வழங்க அமைச்சரவையில் முடிவெடுத்துள்ளோம். மேலும் படகு, வலை சேதங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.

இடைக்கால நிவாரணம் வழங்கும்படி மத்திய அரசை கேட்டுள்ளோம். புதுவையை பொறுத்தவரை பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஏற்பட்ட சிறிய பாதிப்புகளும் சரிசெய்யப்பட்டுவிட்டன.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

மேலும் செய்திகள்