கோவையில் பரபரப்பு: துப்பாக்கி குண்டுகளுடன் விமானத்தில் ஏற முயன்ற தி.மு.க. முன்னாள் எம்.பி. - போலீசார் விசாரணை

கோவையில் துப்பாக்கி குண்டுகளுடன் விமானத்தில் ஏற முயன்ற தி.மு.க. முன்னாள் எம்.பி.யால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-11-19 22:30 GMT
கோவை,

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்தவர் ஜெயத்துரை. தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான இவர் தனது உறவினர்களை பார்ப்பதற்காக கோவை வந்தார். பின்னர் அவர் விமானம் மூலம் சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வந்தார்.

அப்போது விமான நிலையத்தில் உள்ள சோதனை அதிகாரிகளும், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் முன்னாள் எம்.பி.ஜெயத்துரை கொண்டு வந்த சூட்கேசில் சோதனை செய்தனர். அதில் கைத்துப்பாக்கிக்கு (பிஸ்டல்) போடக்கூடிய 5 குண்டுகள் மட்டும் இருந்தன. உடனே போலீசார் பாதுகாப்பு கருதி இந்த தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்று கூறினார்கள்.

அதற்கு ஜெயத்துரை, தன்னிடம் துப்பாக்கிக்கான உரிமம் இருக்கிறது என்பதால் அதை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு போலீசார் நீங்கள் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்பதால், குண்டுகளை எடுத்துச்செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள்.

இதையடுத்து போலீசார் அந்த குண்டுகளை பறிமுதல் செய்தனர். உடனே அவர் துப்பாக்கி பயன்படுத்துவதற்கான உரிமத்தின் நகலை காண்பித்தார். இதையடுத்து போலீசார் குண்டுகளை திரும்ப அவரிடம் கொடுத்தனர். அவர் அந்த குண்டுகளை தனது உறவினரிடம் கொடுத்துவிட்டு, விமானத்தில் பயணம் செய்ய சென்றார். ஆனால் அதற்குள் விமானம் அங்கிருந்து சென்றுவிட்டது. இதனால் அவர் சென்னை செல்ல முடியாமல் அங்கிருந்து திரும்பினார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விமான நிலையத்தில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து முன்னாள் எம்.பி.ஜெயத்துரையிடம் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அவரிடம் துப்பாக்கி உரிமத்தின் அசலை கேட்டனர். அவர் அதை போலீசாரிடம் காண்பித்தார். எனினும் நடந்த சம்பவத்துக்கு எழுதி கொடுத்துவிட்டு விமான நிலையம் சென்றார்.

பின்னர் அவர் மற்றொரு விமானம் மூலம் நேற்று காலை கோவையில் இருந்து சென்னை சென்றார். இந்த சம்பவம் காரணமாக கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்