நாட்டுக்கோழிகள் வளர்க்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

நாட்டுக்கோழிகள் வளர்க்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2018-11-19 21:45 GMT
விழுப்புரம், 

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 2018-19-ம் ஆண்டுக்கான கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தலா 200 பயனாளிகள் வீதம் 4,400 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இத்திட்டத்தில் ஒரு பயனாளிக்கு 4 வார வயதுடைய 50 நாட்டுக்கோழிகள் வழங்கப்படும். பயனாளிகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஏழ்மையான பெண்களாக இருப்பதுடன், விண்ணப்பத்தில் வறுமைக்கோடு எண்ணை குறிப்பிட வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

மேலும் மாற்றுத்திறனாளி, விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஆதரவு இல்லாதவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விலையில்லா கறவை பசுக்கள், வெள்ளாடுகள் மற்றும் கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயனடைந்தவராக இருத்தல் கூடாது.

இதில் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பில் இருந்து தேர்வு செய்யப்படுவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் பகுதி கால்நடை மருத்துவமனையை தொடர்பு கொண்டு அதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுத்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்