மஞ்சூர் அருகே: மின்னல் தாக்கி வீடு தீப்பற்றி எரிந்தது

மஞ்சூர் அருகே மின்னல் தாக்கி வீடு தீப்பற்றி எரிந்தது.

Update: 2018-11-19 22:30 GMT
மஞ்சூர்,

மஞ்சூர் அருகே உள்ளது குந்தா கோத்தகிரி. இங்கு கோத்தர் இன மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு 1.30 மணியளவில் குந்தா கோத்தகிரி அரசு பஸ் டிரைவரான பிரபு என்பவரது ஓடுகள் வேயப்பட்ட வீட்டின் மீது மின்னல் தாக்கியது. இதில் வீட்டின் ஒருபுறம் தீப்பற்றி எரிந்தது. மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த பிரபு, அவரது மனைவி சகிலா மற்றும் குழந்தைகள் சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையில் தீ வீடு முழுவதும் பற்றி எரிந்தது.

உடனே அப்பகுதி பொதுமக்கள் இணைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டின் நடுப்பகுதி இடிந்தது. மேலும் அங்கிருந்த துணிகள், பணம் உள்பட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து தகவல் அறிந்த குந்தா தாசில்தார் ஆனந்தி, பிக்கட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் கவுசல்யா மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்