குடியாத்தம் அருகே ‘நிமோனியா’ காய்ச்சலுக்கு மனைவியுடன் நகை தொழிலாளி பலி
குடியாத்தம் அருகே ‘நிமோனியா’ காய்ச்சலுக்கு நகை தொழிலாளி மனைவியுடன் இறந்தார்.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அரி (வயது 33), நகை தொழிலாளி. இவரது மனைவி ரோஜா என்கிற குமாரி (27). இவர்களுக்கு மதியழகன் (6) என்ற மகனும், சோவியா (3) என்ற மகளும் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதற்காக அவர்கள் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இருவருக்கும் காய்ச்சல் அதிகரிக்கவே அவர்கள் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளார்.
இதனையடுத்து அரி மற்றும் ரோஜா ஆகியோர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிறிது நேரத்திலேயே அரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ரோஜாவும் நள்ளிரவில் உயிரிழந்தார். கணவன், மனைவி இருவரும் ‘நிமோனியா’ காய்ச்சலால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மூங்கப்பட்டு கிராமத்தில் வேறு யாராவது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என ஆய்வு செய்வதற்காக கல்லப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் விமல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர் உஷா ஆகியோர் சென்றனர். அங்கு மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் தீவிர சுகாதார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கணவன் - மனைவி இருவரும் ‘நிமோனியா’ காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.