காலாப்பட்டு அருகே கடலில் மிதந்த மர்ம பொருள்

காலாப்பட்டு அருகே கடலில் மிதந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-11-18 22:30 GMT
காலாப்பட்டு,


புதுச்சேரியை அடுத்த சின்ன காலாப்பட்டு மீனவர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடற்கரையில் இருந்து அவர்கள் படகில் சிறிது தூரம் சென்றதும், அங்கு பெரிய இரும்பு தொட்டி போன்ற ஒரு மர்ம பொருள் கடலில் மிதந்து வருவதை பார்த்தனர்.

அதனை அவர்கள் தங்கள் படகில் கட்டி கரைக்கு இழுத்து வர முயன்றனர். சிறிது தூரம் கரையை நோக்கி இழுத்து வந்தனர். அதன் பின்னர் அந்த பொருளை இழுக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து அந்த மர்ம பொருள் குறித்து காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். பின்னர் அதுகுறித்து புதுச்சேரி கடலோர காவல் போலீசாருக்கும், உழவர்கரை தாசில்தாருக்கும் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் போலீஸ் சூப்பிரண்டு ரவிக் குமார், தாசில்தார் சுரேஷ்ராஜன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து, மர்மபொருளை பார்வையிட்டனர்.

கடலில் மிதந்து வந்த பெரிய இரும்பு தொட்டி போன்ற பொருள் கப்பல்களில் பொருத்தப்படும் பொருளா? என போலீசாரும் வருவாய் துறையினரும் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அந்த மர்ம பொருளில் கயிறு கட்டி அதனை 3 டிராக்டர்கள் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அந்த மர்ம பொருள் குறித்து புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த மர்ம பொருள் துறைமுகத்துக்கு கப்பல்கள் வரும்போது, ஏற்கனவே துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்புக்காகவும், சிறிய படகுகளுக்கு கப்பல்கள் நிற்பது குறித்து எச்சரிப்பதற்காகவும் கடலில் மிதக்கவிடப்படும் பெரிய மிதவை என்பது தெரிய வந்தது.

அந்த மிதவை காலாப்பட்டு கடல் பகுதிக்கு எப்படி வந்தது, கஜா புயல் காரணமாக எழுந்த கடல் சீற்றத்தால் ஏதேனும் துறைமுகத்தில் இருந்து அடித்து வரப்பட்டதா? என்பது தொடர்பாக கடலோர காவல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்