தமிழகத்தில் நதிகளை பாதுகாக்க ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் பேச்சு
தமிழகத்தில் நதிகளை பாதுகாக்க ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் கூறினார்.
நெல்லை,
தாமிரபரணி மகா புஷ்கர விழா பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி நதியில் புனித நீராடினார்கள். இந்த விழாவுக்காக பல்வேறு குழுக்கள் ஆங்காங்கே பக்தர்கள் நீராடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
இந்த சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த அமைப்பினருக்கு பாளையங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன் தலைமை தாங்கினார். ஜெயேந்திரன் மணி வரவேற்று பேசினார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாமிரபரணி மகா புஷ்கர விழாவை சிறப்பாக நடத்திய குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தாமிரபரணி மகா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தாமிரபரணி நதியை நீங்கள் புஷ்கர விழாவிற்கு எப்படி சுத்தம் செய்தீர்களோ அதே போல் அடிக்கடி சுத்தம் செய்து அதை தூய்மையாக பராமரிக்கவேண்டும். நதிகளின் பாதுகாப்பு என்பது ஒரு சவாலான விசயமாக உள்ளது. நதிகளில் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவு நீர் கலந்து நதி மாசுபடுவது பெரிய சவாலாக உள்ளது. இதை விட மிகப்பெரிய சவாலாக மணல் கொள்ளை உள்ளது.
தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதை தடுப்பதற்காக நல்லக்கண்ணு ஐகோர்ட்டில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதித்தனர். தாமிரபரணி ஆற்றில் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் மணல் அள்ளுவதை முழுமையாக தடை செய்யவேண்டும். அப்போது தான் ஆறுகளையும், நதிகளை பாதுகாக்க முடியும். தாமிரபரணி தூய்மைக்கு அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டலம் பெரும் முயற்சி எடுத்து வருவது பாராட்டு உரியதாகும். நதிகளை பாதுகாக்க நாம் அனைவரும் உறுதி எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி.மாசானமுத்து, கோபாலகிருஷ்ணன், நல்லபெருமாள், வித்யாசாகர், முத்துகிருஷ்ணன், கல்யாணராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.