திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்பு மேம்பாலத்தின் இணைப்பு ரோடு அமைக்கும் பணி தீவிரம்

திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்புறம் உள்ள மேம்பாலத்தின் இணைப்பு ரோடு அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

Update: 2018-11-17 23:28 GMT
திருப்பூர்,

திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்புறம் ரூ.43 கோடியில் மேம்பாலம் புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மேற்கு பகுதியில் வாகனங்கள் செல்லும் வகையில் இணைப்பு ரோடு அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பாலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கடைக்காரர்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவதில் இழுபறி ஏற்பட்டதால் இணைப்பு ரோடு அமைக்கப்படாமல் இருந்து வந்தது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தது. 18 பேரிடம் இருந்து நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் கையகப்படுத்தி உள்ளனர். பின்னர் அந்த நிலத்தை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பாலத்தின் கிழக்கு பகுதியில் இணைப்பு ரோடு அமைக்கும் பணி தொடங்கியிருக்கிறது. இதற்காக அரிசிக்கடை வீதியில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி செல்லும் கிழக்கு பகுதியில் இணைப்பு ரோட்டோரம் அமைந்துள்ள கட்டிடங்களை இடிப்பதற்கான பணிகளை நெடுஞ்சாலைத்துறை தொடங்கியிருக்கிறது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளன.

கட்டிடங்களின் ஒரு பகுதி இணைப்பு ரோட்டுக்காக இடிக்கப்படுவதால் பாதசாரிகள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு பகுதியில் இணைப்பு ரோடு அமைக்கும் போது போக்குவரத்து நெரிசல் மேலும் குறைய வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்