குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் 2 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை - போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் 2 மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-11-17 22:45 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், ஏற்கனவே நடைபெற்ற குற்றங் களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருதல் குறித்த போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நீதிராஜன், இளங்கோவன், சங்கர், திருமால், ராஜேந்திரன் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக் குமார் பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் மீது பாலியல் ரீதியான குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் 2 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக பாதிக்கப்பட்டவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துதல், நீதிபதி மூலம் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளை முடிக்க வேண்டும்.

மாவட்டத்தில் 85 ‘போக்சோ’ வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதுடன், 53 வழக்குகள் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்குகளில் தேவையான சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

மேலும் செய்திகள்