கோயம்பேட்டில், தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்: மொபட்டை எடுத்து ஓட்டிய தகராறில் கொலை செய்யப்பட்டது அம்பலம் கட்டிட ஒப்பந்ததாரர் கைது

கோயம்பேடில் கட்டிடத்தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது மொபட்டை தெரியாமல் எடுத்து ஓட்டியதால் கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவர் அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

Update: 2018-11-17 22:45 GMT
பூந்தமல்லி,

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் ரமேஷ்(வயது 28). கட்டிடத்தொழிலாளியான இவர், கோயம்பேடு பிள்ளையார் கோவில் 7-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சகதொழிலாளர்களுடன் தங்கி கட்டிடவேலை செய்து வந்தார்.

தான் தங்கி இருந்த வீட்டின் அருகே ரமேஷ், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கோயம்பேடு போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

ரமேஷூடன் தங்கி இருந்த சகதொழிலாளர்கள் மாயமாகி விட்டதால் அவர்கள் ரமேஷை அடித்துக் கொன்றனரா? என போலீசார் சந்தேகித்தனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ரமேஷின் மார்பு எலும்பு உடைந்து, பலியானது தெரியவந்தது.

கோயம்பேடு உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையில் விசாரணை நடத்திய போலீசார், இதுதொடர்பாக சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் பெரியார் நகரைச்சேர்ந்த ஒப்பந்த முறையில் கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் வெங்கடேஷ்(42) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ரமேசை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

கட்டிட ஒப்பந்ததாரரான வெங்கடேஷிடம், ரமேஷ் கொத்தனராக வேலை செய்து வந்தார். கோயம்பேட்டில் உள்ள வீட்டில் சகதொழிலாளர்களுடன் தங்கி இருந்த ரமேஷ், வெங்கடேசுக்கு சொந்தமான மொபட்டை அவருக்கு தெரியாமலேயே எடுத்து ஓட்டி வந்தார். இதனால் வெங்கடேசுக்கும், ரமேசுக்கும் தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், ரமேசை தாக்கினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரது மார்பில் காலால் எட்டி உடைத்தார். இதில் ரமேஷ், அதே இடத்தில் பரிதாபமாக இறந்து விட்டார். ஆனால் இதுதெரியாமல் வெங்கடேஷ் தனது மொபட்டை அங்கிருந்து எடுத்து சென்று விட்டார்.

அதன்பிறகு தான் ரமேஷ் இறந்துவிட்டது அவருக்கு தெரிந்தது. இதனால் போலீசுக்கு பயந்த அவர் மணலியில் பதுங்கி இருந்தார். அங்கு சென்று அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான வெங்கடேஷ், சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்