காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த மீனவர்கள் எதிர்ப்பு

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள், படக்குழுவினரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-17 22:45 GMT
திருவொற்றியூர்,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படம் கடந்த மாதம் வெளியானது. அந்த படத்தில் மீனவ சமுதாய மக்கள் வசிக்கும் இடங்களையும், மீனவர்களையும் தவறாக சித்தரித்து இருந்ததாக மீனவர்கள் இடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இனிமேல் காசிமேடு பகுதியில் யாரும் சினிமா படப் பிடிப்பு நடத்த அனுமதிக்கக் கூடாது என மீனவர்கள் முடிவு எடுத்து இருந்தனர்.

‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் தற்போது ‘சாம்பியன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். நேற்று காலை இந்த படக்குழுவினர், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கான முன்னேற்பாடுகளுடன் வந்தனர்.

இதையறிந்த மீனவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, படக் குழுவினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மீனவர்களுடன் இயக்குனர் சுசீந்திரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ‘சாம்பியன்’ திரைப்படம் முழுவதும் விளையாட்டை மையப் படுத்தி எடுக்கப்படுகிறது. இதில் மீனவர்களையும், வடசென்னை மக்களையும் பாதிக்காத வகையில் கதை அமைத்து இருப்பதாக உத்தரவாதம் அளித்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட மீனவர்கள், சமாதானம் அடைந்தனர். பின்னர் அங்கு சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். அதன்பிறகு அங்கு ‘சாம்பியன்’ சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.

மேலும் செய்திகள்