பெங்களூரு விதான சவுதாவில் பேட்டரி வாகனங்களின் வசதிக்காக மின்னேற்று நிலையம்

பெங்களூரு விதான சவுதாவில் பேட்டரி வாகனங்களின் வசதிக்காக மின்னேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2018-11-17 00:24 GMT
பெங்களூரு, 

கர்நாடக அரசின் மின்சாரத்துறை குறிப்பாக பெங்களூரு மின் விநியோக நிறுவனம் (பெஸ்காம்) சார்பில் பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் பேட்டரியில் ஓடும் வாகனங்களின் வசதிக்காக மின்னேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு மின்னேற்று நிலையத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரியில் ஓடும் வாகனங்களுக்கு உதவ இந்த மின்னேற்று நிலையம் திறக்கப்பட்டுள்ளது. நகரில் காற்று மாசு அடைவதை தடுக்கும் பொருட்டு, மின்சார வாகனங்களுக்கு ஊக்கம் அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மின் சக்தியில் ஓடும் வாகனங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். மின்சக்தி ஏற்றப்பட்ட பிறகு கார்கள் 100 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வரை இயங்கும். இதனால் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். இந்த வாகனங்களின் பராமரிப்பு செலவும் குறைவு தான்.

இந்த நிலையத்தில் தற்போது இலவசமாக பேட்டரிகளில் மின்சாரத்தை சார்ஜ் செய்து கொள்ளலாம். மின்சார வாகனங்களை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு மானியம் வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மாநில அரசு புதிதாக வாங்கும் வாகனங்களில் 50 சதவீதம் மின்சக்தியில் ஓடும் வாகனங்கள் வாங்கப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இதைதொடர்ந்து பெஸ்காம் நிறுவன இயக்குனர் ஷிகா நிருபர்களிடம் கூறியதாவது:-

விதான சவுதாவில் பேட்டரியில் ஓடும் வாகனங்களின் வசதிக்காக மின்னேற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதே போல் நகரில் 11 இடங்களில் இத்தகைய நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம். வருகிற ஜனவரி மாதத்திற்குள் இந்த நிலையங்கள் அமைக்கப்படும்.

தற்போது இலவசமாக மின்சாரம் ஏற்றப்படும். வருகிற காலங்களில் ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாய் 50 பைசா கட்டணம் நிர்ணயிக்கப்படும். தனியார் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் இதுபோன்ற மின்னேற்று நிலையத்தை அமைக்க விதிமுறைகளில் திருத்தம் செய்யப்படும்.

பேட்டரி வாகனங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் செலவாகிறது. ெபட்ரோல் வாகனங்களுக்கு கிலோ மீட்டருக்கு 5 ரூபாய் செலவாகிறது. மின்சார வாகனங்களை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இருப்பது இல்லை.

ஒரு கிலோ வாட் மின்சாரத்திற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு கார் முழுமையாக மின்சக்தியை பெற 90 நிமிடங்கள் ஆகிறது.

இவ்வாறு ஷிகா கூறினார்.

மேலும் செய்திகள்