போலி டெபிட் கார்டுகள் மூலம் ஏ.டி.எம்.களில் பணம் திருடி வந்த வெளிநாட்டுக்காரர் சிக்கினார்
போலி டெபிட் கார்டுகள் மூலம் ஏ.டி.எம்.களில் பணம் திருடி வந்த வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை,
மும்பை விக்ரோலி பார்க்சைட் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் அருகே வெளிநாட்டுக்காரர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது ஏ.டி.எம். மையம் அருகே நின்று கொண்டிருந்த வெளிநாட்டு ஆசாமி, போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி பிடித்தனர்.
இதையடுத்து அவரிடம் இருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் 60 டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம் இருந்தன.
போலீசார் அவரிடம் இருந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை கைப்பற்றி விசாரித்தனர். இதில் அவை அனைத்தும் குளோனிங் முறையில் தயார் செய்யப்பட்ட போலி கார்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வெளிநாட்டு ஆசாமியை அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடம் இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர், ருமேனியா நாட்டை சேர்ந்தவர் ஆவார். அவரது பெயர் கேரவன் மரியன் (வயது49) ஆகும். இவர் கடந்த ஜூன் மாதம் இந்தியாவிற்கு சுற்றுலா விசா மூலம் வந்துள்ளார். டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய இடங்களில் வங்கி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளை குளோனிங் முறையில் போலியாக தயாரித்து ஏ.டி.எம். மையத்தில் பணத்தை திருடி வந்தது தெரியவந்தது.
போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவரை வருகிற 19-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.