கண்காணிப்பு கேமரா பொருத்திய நடமாடும் வாகனம் சாலை விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் சாலை விதிமீறல்களை தடுக்க நடமாடும் வாகனத்தில் சுழலும் கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர்,
இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்வது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது போன்ற சாலை விதிமீறல்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் பகுதிகளில் நிற்கும் போலீசாரிடம் சிக்காமல் சென்றுவிடுகின்றனர்.
இதுபோன்று போலீசாரிடம் சிக்காமல் விதிகளை மீறி செல்பவர்களை கண்காணிக்க தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வேலூரில் சுழலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தின் பின்பகுதியில் 360 டிகிரி சுழலக்கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை வாகனத்திற்குள் அமர்ந்தவாறு கண்காணிக்கும் வகையில் கம்ப்யூட்டர் மானிட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த நடமாடும் வாகனத்தை போக்குவரத்து சிக்னலில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைத்திருப்பார்கள். அப்போது அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் 500 மீட்டர் தூரத்தில் வரும்போதே கண்காணிப்பு கேமராவில் பதிவாகும்.
அப்போது இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தாலோ, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினாலோ, அதிக வேகமாக சென்றாலோ அதை கண்காணிப்பு வாகனத்தில் இருக்கும் நபர், அடுத்த சிக்னலில் இருக்கும் போலீசாருக்கு, விதியை மீறிசெல்லும் வாகனத்தின் எண் அல்லது அதை ஓட்டிச்செல்லும் நபரின் அடையாளத்தை கூறி வாகனத்தை மடக்கி பிடிப்பார்கள்.
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள் சிக்னலில் போலீசை பார்த்ததும் செல்போனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, சிறிது தூரம் சென்று மீண்டும் எடுத்து பேசியபடி ஓட்டுவார்கள். இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தால் போலீசை பார்த்ததும் 2 பேர் இறங்கிக்கொண்டு ஒருவர் மட்டும் ஓட்டுவார். சிக்னலை தாண்டியதும் மீண்டும் 3 பேரும் வாகனத்தில் ஏறிச்செல்வார்கள்.
ஆனால் இதுபோன்ற விதிமீறல்கள் அனைத்தும் இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகும். எனவே இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டும் வந்ததாகவோ, செல்போன் பேசவில்லை என்றோ ஏமாற்றமுடியாது.
இந்த வாகனத்தின் அறிமுக நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் வாகன ஓட்டிகளுக்கு கண்காணிப்பு வாகனம் குறித்து விளக்கினார். அப்போது இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, சுந்தரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த வாகனத்தின் பின்பகுதியில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைமூலம், வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விளக்கப்படுகிறது.