பயணத்துக்கேற்ற நவீன சூட்கேஸ்
புளூஸ்மார்ட் இன்கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய மின்னணு தொழில்நுட்பம் கொண்ட சூட்கேஸை உருவாக்கியுள்ளது.
ரெயில்வே துறையில் முன்பெல்லாம் சூட்கேஸ்களை சுமந்து செல்வதற்கு தனியாக கூலி ஆட்கள் இருப்பார்கள். இப்போது இது பெருமளவு குறைந்துவிட்டது. காரணம் சக்கரம் பொருத்தப்பட்ட சூட்கேஸ்கள். இவை வந்தபிறகு கூலி ஆட்களுக்கு வேலை இல்லாமல் போனது. விமான பயணத்திற்கு ஏற்ற சூட்கேஸ்களும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் லேட்டஸ்ட் வரவுதான் புளூஸ்மார்ட். அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புளூஸ்மார்ட் இன்கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய மின்னணு தொழில்நுட்பம் கொண்ட சூட்கேஸை உருவாக்கியுள்ளது.
இன்டர்நெட் ஆப் திங்க் (ஐ.ஓ.டி.) எனப்படும் நவீன தொழில்நுட்பம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த சூட்கேஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணங்களுக்கு ஏற்ற அளவுகளில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. நான்கு வெவ்வேறு அளவுகளில் அதாவது 55 செ.மீ. (2 நாட்களுக்கு) 69 செ.மீ. (1 வாரத்துக்கு), 75 செ.மீ. (2 வாரத்துக்கு), 80 செ.மீ. (2 வாரத்துக்கு மேற்பட்ட பயணத்துக்கு) ஏற்ற வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
எளிதில் உடையாத பாலி கார்பனேட்டால் இவை உருவாக்கப்பட்டுள்ளன. சர்வதேச பயண கட்டுப்பாட்டு அமைப்பு (டி.எஸ்.ஏ.) அங்கீகரித்த அளவுகளில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜி.பி.எஸ்., ரிமோட் லாக்கிங், பேட்டரி சார்ஜர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இதன் எடை 4 கிலோ மட்டுமே.
பொதுவாக விமான பயணத்தின்போது கேபின் லக்கேஜ் (நமது இருக்கைக்கு மேல் வைப்பது) பெட்டிகளில் பவர் பேங்க் உள்ளிட்ட மின்னணு கருவிகளுக்கு அனுமதிப்பதில்லை. ஆனால் இந்த சூட்கேஸுக்கு எவ்வித தடையும் விமான நிலையங்களில் தெரிவிப்பதில்லை. இதற்குக் காரணம் இதுவரை இந்த சூட்கேஸில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை என்பதுதான்.
இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் மூலம் நிர்வகிக்கலாம். உங்கள் கட்டுப்பாட்டிலிருந்து இது விலகினால் ஆட்டோமேடிக் லாக் மூலம் இந்த பெட்டி மூடிக் கொள்ளும். இதனால் உங்கள் அனுமதியின்றி இதைத் திறக்க முடியாது.
நவீன வசதிகள் கொண்ட இந்த சூட்கேஸ் விலையும் சற்று அதிகம்தான். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யும் உரிமையை அமேசான் பெற்றுள்ளது. தொடக்கத்தில் இதன் விலை ரூ. 1.14 லட்சம். தற்போது 35 சதவீத தள்ளுபடியில் ரூ.73,686-க்கு கிடைக்கிறது.
இறக்குமதி கட்டணம், டெலிவரி கட்டணம் ஏதும் இதற்கு அமேசான் விதிக்கவில்லை. சர்வதேச விமான பயணங்களில் எடுத்துச் செல்லும் பொருட்களின் எடை மிகவும் முக்கியம். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் எடையிருந்தால் பொருட்களை வெளியே எடுத்து விடுவர். இந்த சூட்கேஸில் அந்தப் பிரச்சினையும் ஏற்படாது. இதில் உள்ள எடை காட்டும் கருவி சூட்கேஸில் எவ்வளவு எடை உள்ளது என்பதையும் காட்டிவிடும்.