கடலோர கிராமங்களில் புயல் எச்சரிக்கை அறிவிப்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் புயல் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் புயல் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கஜா புயல்
வங்கக்கடலில் உருவாகி உள்ள கஜா புயல் வலுவடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும், பலத்த காற்று வீசும், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 200 படகுகள் தங்கு கடல் மீன்பிடித்தலுக்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது.
எச்சரிக்கை அறிவிப்பு
இதனால் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோர கிராமங்களில் புயல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பை கொடுத்து உள்ளனர். இதனால் மீனவ கிராம தலைவர்கள் மூலம் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மற்ற மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினரும் கடலோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.