மேலூர் பகுதியில் மூடப்பட்ட கிரானைட் குவாரிகளை திறக்க கோரி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

மேலூர் பகுதியில் மூடப்பட்டுள்ள கிரானைட் குவாரிகளை திறக்க கோரி கிரானைட் தொழிற்சாலை தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-13 23:30 GMT

மேலூர்,

மேலூர் பகுதியில் செயல்பட்டு வந்த கிரானைட் குவாரிகள் மற்றும் கிரானைட் தொழிற்சாலைகள் அனைத்தும் கிரானைட் முறைகேடு வழக்குகள் தொடர்பாக கடந்த 2013–ம் ஆண்டு மூடப்பட்டன. மேலூர் மற்றும் மதுரை கோர்ட்டுகளில் 100–க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போது விசாரணையில் உள்ளன. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்தநிலையில் மூடப்பட்ட கிரானைட் குவாரிகளை மீண்டும் திறக்க கோரி தமிழ்நாடு கிரானைட் குவாரிகள், தொழிற்சாலைகள் மற்றும் அவை சார்ந்த தொழிலாளர் நல சங்கத்தினர் நேற்று மேலூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சங்கத்தின் மாநில தலைவர் பொற்கைபாண்டியன், செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் முரளி ஆகியோர் தலைமை தாங்கினர்.

போராட்டத்தின்போது மாநில தலைவர் பொற்கை பாண்டியன் பேசியதாவது:–

மேலூர் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யபட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணியை நமது நாட்டுக்கு கிரானைட் குவாரிகள் பெற்று தந்தன. இதன்மூலம் மத்திய–மாநில அரசுகளும், மதுரை மாவட்ட நிர்வாகமும் மக்களின் வளர்ச்சி பணிகளுக்கு அவற்றை பயன்படுத்தின. இந்தநிலையில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி மேலூர் பகுதியில் செயல்பட்ட 147 கிரானைட் குவாரிகள் மூடப்பட்டன. 84 குவாரிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பட்ட அன்னிய செலவாணி பாதிக்கப்பட்டதோடு அல்லாமல் ஆயிரக்கணக்கான கிரானைட் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இழந்து பாதிக்கப்பட்டனர். வறுமையினால் கிரானைட் தொழிலாளர்கள் பலர் தற்கொலை செய்துகொண்டனர்.

கிரானைட் குவாரிகள் மீதான வழக்குகளின் மீதான விசாரணைகளை போர்க்கால அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். மூடிக்கிடக்கும் அனைத்து கிரானைட் குவாரிகளையும், கிரானைட் தொழிற்சாலைகளையும் மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள கிரானைட் தொழிலாளர்கள் அனைவரையும் திரட்டி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்