வட இந்தியர்களிடம் ராஜ்தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும் : காங்கிரஸ், பா.ஜனதா வலியுறுத்தல்

வட இந்தியர்களிடம் ராஜ்தாக்கரே மன்னிப்பு கேட்கவேண்டும் என்று காங்கிரஸ், பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

Update: 2018-11-13 23:16 GMT
மும்பை,

நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே வட இந்தியர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் பலமுறை பேசியுள்ளார்.

இந்தநிலையில் மும்பையில் வாழும் வட இந்தியர்களின் நலனுக்காக இயங்கிவரும் சங்கம் ஒன்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ராஜ் தாக்கரேக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம்(டிசம்பர்) 2-ந்தேதி காந்திவிலியில் நடக்கிறது.

வட இந்தியர்கள் நிகழ்ச்சியில் ராஜ்தாக்கரே பங்கேற்க முடிவு செய்ததற்கு அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவர் சஞ்சய் நிருபம் கூறியதாவது:-

நவநிர்மாண் சேனா மற்றும் ராஜ் தாக்கரேவால் முன்பு வடஇந்தியர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எப்படி கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர், பய முறுத்தப்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் பேச ராஜ் தாக்கரே முடிவு செய்துள்ளார். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதற்கு முன் அவர் வட இந்தியர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பா.ஜனதா கட்சியின் மும்பை பொதுச்செயலாளர் அமர்ஜித் மிஷ்ரா கூறுகையில், ஏழ்மையிலும், வேலையின்றியும் தவித்த வட இந்தியர்களுக்கு எதிராக நஞ்சை பரப்பியது ராஜ் தாக்கரேவுக்கும் அவரது கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர்களின் வளர்ச்சிக்கு முன்னர் நவநிர்மாண் தலைவர் தலைவணங்கி உள்ளார்’’ என்றார்.

சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஷ்மி கூறுகையில், இது ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கை தவிர வேறு ஒன்றும் இல்லை” என்றார்.

மேலும் செய்திகள்