பவானி ஆற்றில் சாய கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் - கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்

அந்தியூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2018-11-13 22:45 GMT

அந்தியூர்,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அந்தியூர் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அந்தியூரில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் துரைராஜா தலைமை தாங்கினார். தலைவர் லோகநாதன், இளைஞர் அணி செயலாளர்கள் கணபதி, வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

உரிய நேரத்தில் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குவதுதான் பொதுமக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதாகும். ஆனால் தமிழ்நாட்டில் எந்த தேர்தலாக இருந்தாலும் சுயநலத்தோடு தள்ளிப்போடப்படுகிறது என்ற கருத்து மக்களிடையே ஏற்பட்டு உள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தலையும், 20 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலையும் உடனடியாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகாசியில் அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளும் மூடப்பட்டு இருக்கிறது. தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள். அடுத்த தீபவாளிக்கு என்ன நடக்கும் என்பது தெரியாமல் பட்டாசுகளை உற்பத்தி செய்வதா? வேண்டாமா? என்று எந்தவிதமான தெளிவும் இல்லாமல் பட்டாசு தொழிற்சாலையை மூடுகின்ற அளவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். தீபாவளியன்று காற்று மாசுபடும் என கவலைப்படும் மத்திய, மாநில அரசுகள் நீர்நிலைகளில் சாய கழிவுநீர் கலப்பதால் புற்று நோய் ஏற்பட்டு மக்கள் இறக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படுவதில்லை. பவானி ஆற்றில் சாய கழிவுநீர் தொடர்ந்து கலந்து கொண்டே இருக்கிறது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதிகாரிகள் உடனடியாக சாய ஆலைகளுக்கு சீல் வைக்கிறார்கள். பின்னர் ஒரு மாதம் கழித்து சாய ஆலைகள் திடீரென்று திறக்கப்படுகிறது. எனவே பவானி ஆற்றில் சாய கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையின் உபரிநீரை அந்தியூர் பகுதிக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்