ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி மறியல்: மின் ஊழியர்கள் 522 பேர் கைது

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி மறியலில் ஈடுபட்ட மின் ஊழியர்கள் 522 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-11-13 23:00 GMT
திருவண்ணாமலை,

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி மின் ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் 522 பேரை போலீசார் கைது செய்தனர்.

மின்வாரியத்தில் பல்வேறு பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு.வின் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் மாநில செயலாளர் சிவராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். மாநிலம் தழுவிய போராட்டமாக நடந்த இதனை சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாரி தொடங்கி வைத்து பேசினார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் “மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு, ஒப்பந்த படி அமைச்சர் அறிவித்த ரூ.380 கூலி ஆகியவற்றை வழங்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி மீதமுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆனால் இந்த போராட்டத்திற்கு அனுமதி ஏதும் பெறப்படவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 522 பேரை திருவண்ணாமலை தாலுகா போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்