கட்சி தொடங்கியதும் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசை - நடிகர்கள் மீது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கு

கட்சி தொடங்கியதும் முதல்-அமைச்சர் பதவிக்கு நடிகர்கள் ஆசைப்படுகின்றனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Update: 2018-11-10 23:15 GMT
நிலக்கோட்டை,

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பன், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பேரூர் கழக செயலாளர்கள் சேகர், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட துரோகிகளால் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற செயல்வீரர்கள் பாடுபட வேண்டும். தமிழகம் முழுவதும் கட்சி வேறுபாடின்றி அனைத்து தொகுதிகளிலும் தாராளமாக நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். இந்த சூழலில் தமிழக அரசை கண்டித்து டி.டி.வி.தினகரன் அணியினர் உண்ணாவிரதம் இருப்பது என்பது கேலி கூத்தாக உள்ளது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது மு.க.ஸ்டாலின் கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சிலர் கட்சியை தொடங்கிய உடனே முதல்-அமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இவர்கள் என்ன மகாத்மா காந்தியா?.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் உதயகுமார் எம்.பி., முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தேன்மொழி, ஒன்றிய துணை செயலாளர் நல்லதம்பி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் சீனிவாசன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் செல்வகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகள்