கூடங்குளம் அருகே பரிதாபம் கடலில் மூழ்கி பள்ளிக்கூட மாணவர்கள் 2 பேர் பலி

கூடங்குளம் அருகே கடலில் மூழ்கி பள்ளிக்கூட மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.

Update: 2018-11-07 22:00 GMT
வள்ளியூர், 

கூடங்குளம் அருகே கடலில் மூழ்கி பள்ளிக்கூட மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.

பள்ளிக்கூட மாணவர்கள்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் கிராமத்தை சேர்ந்த கென்னடி மகன் ரிசோ (வயது 10). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். அதே ஊரை சேர்ந்த செல்வன் மகன் சந்தியாகு ராயப்பன் (11). இவன் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

தீபாவளி பண்டிகையையொட்டி அந்த ஊரை சேர்ந்த சிறுவர்கள் பெருமணல் கடற்கரைக்கு சென்று விளையாடினர். ஒருசிலர் கடலில் குளித்து மகிழ்ந்தனர். இதில் ரிசோ, சந்தியாகு ராயப்பன் ஆகியோரும் கடலுக்குள் இறங்கி குளித்தனர்.

கடலில் மூழ்கி பலி

அப்போது திடீரென்று கடலில் ராட்சத அலைகள் எழும்பின. இதில் ரிசோ, சந்தியாகு ராயப்பன் ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். அவர்கள் கடலில் மூழ்கினர். இதைக்கண்ட மீனவர்கள் மற்றும் அந்த பகுதியில் நின்றிருந்தவர்கள் கடலுக்குள் சென்று 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் மயங்கிய நிலையில் இருந்தனர்.

இதையடுத்து ஒரு மாணவனை நாகர்கோவில் ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு மாணவனை கூடங்குளம் அணுவிஜய் நகரியத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடங்குளம் அருகே கடலில் மூழ்கி பள்ளிக்கூட மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்