கார்- மோட்டார் சைக்கிள் மோதல்: திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை பலி

சங்கரன்கோவில் அருகே கார், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை பலியானார்.

Update: 2018-11-07 21:30 GMT
திருவேங்கடம், 

சங்கரன்கோவில் அருகே கார், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை பலியானார்.

புது மாப்பிள்ளை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலஇலந்தைகுளத்தை சேர்ந்தவர் வில்லியம் (வயது 30). இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், திருவேங்கடத்தை அடுத்துள்ள வாகைக்குளத்தை சேர்ந்த ஏசுராஜா மகள் வேல் சத்யாவிற்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதனால் வில்லியம், கடந்த சில நாட்களுக்கு முன்பு விருந்துக்கு தனது மாமனார் வீட்டிற்கு மனைவியுடன் வந்திருந்தார். கடந்த 5-ந் தேதி மாலையில் மாமனார் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவிலுக்கு சென்றார். அன்று நள்ளிரவு 11.30 மணியளவில் சங்கரன்கோவிலில் இருந்து மீண்டும் வாகைக்குளத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் சிதம்பராபுரம் அருகே சென்றுகொண்டிருந்தது.

பலி

அப்போது அந்த பகுதியில் வந்த கார் எதிர்பாராதவிதமாக, அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குருவிகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்