புலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: அரசு மீது சிவசேனா கடும் தாக்கு

புலி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அரசை சிவசேனா கடுமையாக தாக்கி பேசியுள்ளது.

Update: 2018-11-06 22:00 GMT
மும்பை,

புலி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அரசை சிவசேனா கடுமையாக தாக்கி பேசியுள்ளது.

சிவசேனா தாக்கு

யவத்மால் மாவட்டம் போராடி வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 13 பேரை கொன்ற பெண் புலி வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது. இதற்கு மத்திய மந்திரி மேனகா காந்தி மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சர்ச்சையை தொடர்ந்து பெண் புலி சுட்டுக்கொல்லப்பட்டதில் தவறுகள் ஏதும் நடந்தனவா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.

இந்த நிலையில் புலி கொல்லப்பட்டதை கண்டிக்கும் வகையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

காடு அழிக்கப்படும்

ஒருவர் தனது கையை பாம்பு புற்றுக்குள் விட்டால், இயற்கையாகவே தாக்கும் குணம்கொண்ட பாம்பு அவரை கடித்து விடும்.

மனிதர்கள் புலிகள் வாழும் வனப்பகுதிக்குள் சென்று தங்கள் வாழ்விடங்களை அமைத்தால், காடுகள் அழிக்கப்படும், மலைகள் உடைத்து நொறுக்கப்படும். அது புலிகள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறும். அப்படி பல்வேறு தொந்தரவுகளை புலிகளுக்கு கொடுத்துவிட்டு பின்பு புலிகளிடம் இருந்து மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

முன்னெச்சரிக்கை என்ன?

மும்பை புறநகர் பகுதியில் உள்ள போரிவிலி தேசிய பூங்காவை சுற்றியுள்ள காலனிகளில் வனவிலங்குள் புகுந்து அடிக்கடி தொல்லை கொடுத்து வருகின்றன.

சிறுத்தை புலிகள் சில நேரங்களில் மனிதர்களையும் வேட்டியாடி விடுகின்றன.

புலியை கொல்ல நடவடிக்கை எடுத்தவர்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான சண்டையை போக்க முன்னெச்சரிக்கையாக என்ன நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அரசு நடவடிக்கை

விலங்குகளை சுட்டுக்கொல்வதற்கு பதிலாக மனிதர்கள் மேலும் ஒழுக்கத்துடன் வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.

இனிமேலாவது வனவிலங்குகளின் தாக்குதலுக்கு பயந்து பீதியில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான உறைவிடமும், சுகாதார வசதியும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் அவ்னி பெண் புலி கொல்லப்பட்டதில் பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ளன. அந்த புலியால் வேட்டையாடப்பட்டதாக கூறப்படும் 13 பேரில், 6 பேரின் உடல் மட்டுமே பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மட்டுமே புலியால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னித்துவிடு

13 பேரை கொன்ற பெண் புலி ஆட்கொல்லி என கூறப்படுகிறது. தற்போது நிலவும் வறட்சிக்கும், பட்டினிக்கும், ஊட்டச்சத்து குறைப்பாட்டிற்கும் ஏன் எந்த அரசும் பொறுப்ே்பற்றுகொள்ள மறுக்கின்றன. இவை விவசாயிகளின் உயிரிழப்புக்கு காரணம் இல்லையா?

அவ்னி நீ மனிதர்களின் பேராசைக்காக உனது உயிரை இழந்திருக்கிறாய். மனிதர்கள் ஒழுங்காக வாழ முடியாத மாநிலத்தில், வனவிலங்கான உனக்காக என்ன சொல்வது? அவ்னி நீ கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்காக எங்களை மன்னித்துவிடு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்