தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளத்தின் மதகை திறந்த மர்மநபர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளத்தின் மதகை மர்ம நபர் திறந்து விட்டதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளத்தின் மதகை மர்ம நபர் திறந்து விட்டதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.
தண்ணீர் சூழ்ந்தது
தூத்துக்குடி அருகே உள்ளது கோரம்பள்ளம் குளம். இந்த குளத்தில் மழை காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குளத்தில் அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர், கோரம்பள்ளம் குளத்தின் கரையில், வாய்க்கால்களுக்கு திறந்து விடுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த 8-வது மதகை திறந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் பொன்னகரம், கோரம்பள்ளம் மேற்கு தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
நடவடிக்கை
நேற்று அதிகாலையில் அந்த ஊரை சேர்ந்த சிலர் குளத்தின் நீர்மட்டம் பகுதியாக வந்தபோது, குளத்தின் மதகு திறக்கப்பட்டு குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அந்த மதகை அடைத்தனர். தற்போது தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டு உள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் பெருகி தேங்கி கிடப்பதால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உடனடியாக தேங்கி கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.