ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் ‘திடீர்’ விரிசல் கண்டுபிடிப்பு

ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் ‘திடீர்’ விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து 3 ரெயில்கள் நிறுத்தப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக சென்றன.

Update: 2018-11-05 22:45 GMT
ஜோலார்பேட்டை,

சென்னை கிழக்கு கடற்கரையையும், கர்நாடக மாநிலம் மேற்கு கடற்கரை நகரையும் இணைக்கும் வகையில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக இரட்டை ரெயில்பாதை அமைந்துள்ளது. இந்த வழியாக கோவை, மதுரை, திருவனந்தபுரம், மங்களூர், பெங்களூரு உள்பட பல்வேறு ஊர்களுக்கு அதிவேக ரெயில்கள் 24 மணி நேரமும் சென்று வருகின்றன.

இந்த ரெயில்பாதையை இரவு பகலாக ரெயில்வே பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் ரெயில்வே பணியாளர்கள் பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் தண்டவாளத்தை பார்வையிட்டவாறே சென்றனர். அப்போது ஜோலார்பேட்டைக்கும், கேத்தாண்டபட்டிக்கும் இடையே ஒரு இடத்தில் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டிருந்தது. அந்த இடத்தை அதற்கு முன்பு 10-க்கும் மேற்பட்ட அதிவேக ரெயில்கள் கடந்து சென்றிருந்தன.

இந்த நிலையில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே அதிகாரிகளுக்கு பணியாளர்கள் தகவல் அளித்தனர். உடனடியாக தண்டவாள பராமரிப்பு பிரிவு ஊழியர்கள், மெக்கானிக் பிரிவு ஊழியர்கள் உயர் அதிகாரி ஜோதிபிரியா தலைமையில் விரைந்து வந்தனர். அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் உதவியுடன் நவீன கருவிகள் மூலம் தண்டவாளத்தை விரைந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அதற்குள் அந்த வழியாக வந்த மதுரை-சென்னை வாராந்திர அதிவேக ரெயில், திருவனந்தபுரம்-சென்னை மெயில் ஆகிய ரெயில்கள் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திலேயே 5 மணியளவில் நிறுத்தப்பட்டன. அதேபோல் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை புறப்படும் ஏலகிரி எக்ஸ்பிரசும் அங்கேயே நிறுத்தப்பட்டது.

விரிசல் ஏற்பட்ட இடத்தில் தண்டவாளம் சீரமைக்கப்பட்டு சோதனை முடிந்தவுடன் ரெயில்கள் செல்ல சிக்னல் கொடுக்கப்பட்டது. அதன்பின் 3 ரெயில்களும் ஒன்றன் பின் ஒன்றாக சென்னைக்கு காட்பாடி வழியாக விரைந்து சென்றன. சுமார் 1 மணி நேரம் 3 ரெயில்களும் ஜோலார்பேட்டையிலேயே நிறுத்தப்பட்டதால் சென்னைக்கு காலையிலேயே சென்று வேலைக்கு செல்ல நினைத்தவர்கள் தாமதமாக சென்றனர்.

சரியான நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டதால் 3 ரெயில்களும் விபத்திலிருந்து தப்பின.

மேலும் செய்திகள்