தீபாவளி போனஸ் கேட்டு சேலத்தில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்

தீபாவளி போனஸ் கேட்டு சேலத்தில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-05 23:00 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய 4 மண்டலங்களில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் தினமும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 21 வார்டுகளை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது.

மீதியுள்ள 39 வார்டுகளில் மாநகராட்சி மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனத்தின் கீழ் 700-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அனைத்து வார்டுகளிலும் குப்பைகளை அள்ளுதல், சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட 32 மற்றும் 33-வது வார்டுகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சார்பில் தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்று சேலம் பழைய பஸ்நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தீபாவளி போனஸ் உடனடியாக வழங்க சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதேபகுதியை சேர்ந்த சிலரின் தூண்டுதலின்பேரில் துப்புரவு பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்