சிக்கமகளூரு பஸ் நிலையத்தில் வீச்சரிவாளுடன் சுற்றிய பெண்ணால் பரபரப்பு
சிக்கமகளூரு பஸ் நிலையத்தில் வீச்சரிவாளுடன் சுற்றிய பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கணவர் பிரிந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்த போலீசார் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு டவுன் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பேண்ட் சட்டை அணிந்த பெண் ஒருவர் வந்தார். அவர் கையில் வீச்சரிவாள் வைத்திருந்தார். அதனுடன் அங்குமிங்கும் அந்த பெண் சுற்றித்திரிந்தார். மேலும் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளை பார்த்து அந்தபெண், உன்னை வெட்டி கொன்றுவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்தார். இதனால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து சில பயணிகள், அந்த பெண்ணிடம் இருந்த வீச்சரிவாளை பறிக்க முயன்றனர். ஆனால் அந்த பெண் வெட்டி விடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.
இதனால் சம்பவம் பற்றி பயணிகள், சிக்கமகளூரு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து, பெண்ணிடம் இருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.
கணவர் பிரிந்ததால் மனநலம் பாதிப்பு
விசாரணையில், அந்த பெண் சிக்கமகளூரு ஹரீப்ஹள்ளி பகுதியை சேர்ந்த சுருதி என்பதும், இவருக்கு திருமணம் ஆகி கணவர், 10 வயதில் ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது. ஆனால் கணவர், சுருதியையும், அவரது மகனையும் விட்டு பிரிந்து சென்று விட்டதும் தெரியவந்தது. கணவர் பிரிந்து சென்றதால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் தான் அவர் வீச்சரிவாளுடன் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சுருதியை, சிக்கமகளூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். மேலும் அவரது 10 வயது மகனை போலீசார் மீட்டு, சிக்கமகளூருவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நேற்று காலை சேர்த்தனர். வீச்சரிவாளுடன் பஸ் நிலையத்தில் மனநலம் பாதித்த பெண் வலம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே பெண் வீச்சரிவாளுடன் பஸ் நிலையத்தில் சுற்றிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி சலசலப்பை உண்டாக்கியுள்ளது.