தேன்கனிக்கோட்டை அருகே விவசாயிகள் மர்மசாவு போலீசார் விசாரணை

தேன்கனிக்கோட்டை அருகே விவசாயிகள் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-03 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பேளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மதனகிரியப்பா (வயது 52), சீனிவாசன் (28). விவசாயிகள். இவர்கள் நேற்று முன்தினம் அன்னியாளம் கிராமத்தில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றனர். அதன் பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மதனகிரியப்பா, சீனிவாசனை கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக அவர்கள் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 பேரையும் தேடி வந்தனர்.

மர்மசாவு

இந்த நிலையில் அன்னியாளம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள பாழடைந்த கிணற்றில் நேற்று மதனகிரியப்பாவும், சீனிவாசனும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் இருந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

தொடர்ந்து உடல்களை பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மதனகிரியப்பாவும், சீனிவாசனும் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். விவசாயிகள் 2 பேர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்