இடிந்து விழுந்த சிதம்பரம் பஸ்நிலைய கட்டிடத்தை அண்ணாமலை பல்கலைக்கழக கட்டிடவியல் துறை குழுவினர் ஆய்வு

மழையால் இடிந்து விழுந்த சிதம்பரம் பஸ் நிலைய கட்டிட பகுதியை நேற்று அண்ணாமலை பல்கலைக்கழக கட்டிடவியல் துறை குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2018-11-03 23:00 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக, நேற்று முன்தினம் சிதம்பரம் பஸ்நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு மைய கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டோ மாஸ்டராக வேலை பார்த்த வெங்கடேசன் என்பவர் காயத்துடன் உயிர் தப்பினார்.

இந்த நிலையில் நேற்று அண்ணாமலை பல்கலைக்கழக கட்டிடவியல் மற்றும் கட்டுமானதுறை நிபுணர் குழுவினர் ரகுநாத், அருள்செல்வன், பாஸ்கர் ஆகியோர் பஸ் நிலையத்திற்கு நேரில் வந்து, இடிந்து விழுந்த கட்டிட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்தும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதை தொடர்ந்து நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷாவிடம் இந்த கட்டிடத்தின் உறுதிதன்மை குறித்து விளக்கினர். அப்போது அவர்கள், பஸ் நிலைய கட்டிடம் மிகவும் பழமைவாய்ந்தது ஆகும். இந்த கட்டிடத்தில் சரியான பராமரிப்பு இல்லாததாலும், மழைநீர் மேல்பகுதியில் தேங்கி, சுவரின் உள்ளே இறங்கியதாலும் வலுவிழந்த நிலையில் இருந்ததால் இடிந்து விழுந்துள்ளது என்று தெரிவித்தனர். மேலும் இதை மீண்டும் பராமரிப்பதுடன், சுவரில் வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளை சரிசெய்யவும், மழைநீர் தேங்கி நிற்காத அளவில் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் சுரேந்தர்ஷாவிடம் அவர்கள் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்களுடன் நகராட்சி மின்வாரிய செயலாளார் சலீம், சுகாதார ஆய்வாளர் பால்டேவிஸ் உள்பட நகராட்சி ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்