மனைவி வேலைக்கு சென்றதால் தகராறு: தீக்குளித்து தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை

நாகூர் அருகே மனைவி வேலைக்கு சென்றதால் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-03 22:15 GMT
நாகூர்,

நாகையை அடுத்த நாகூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஜினி (என்கிற) முருகன் (வயது 40). தொழிலாளி. இவருடைய மனைவி முத்துஸ்ரீ. முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. குடும்ப வறுமை காரணமாக முத்துஸ்ரீ கூலி வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த முருகன், மனைவி முத்துஸ்ரீயை இனிமேல் வேலைக்கு செல்லக்கூடாது என தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது முருகன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். அப்போது அலறல் சத்தத் கேட்டு அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்