சீர்காழி பகுதியில் பரவலாக மழை: சம்பா நெற்பயிர் நடவு பணி தீவிரம் விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி பகுதியில் பரவலாக மழை பெய்தால் சம்பா நெற்பயிர் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2018-11-03 22:30 GMT
சீர்காழி,

தமிழக அரசு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி சம்பா, சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இல்லாததால் காலம் தாழ்த்தி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் பாசனத்துக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் சம்பா நெற்பயிர் சாகுபடி பணி பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பா சாகுபடி செய்ய தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஆனால், காவிரிநீர் கடைமடை பகுதியான சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், எடமணல், செம்மங்குடி, சட்டநாதபுரம், காரைமேடு, அகணி உள்ளிட்ட கிராமங்களுக்கு பாசனத்துக்கு தேவையான அளவு வரவில்லை. இதனால் சம்பா சாகுபடி காலம் தாழ்த்தி தொடங்கப்பட்டு நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு கிராமங்களில் தற்போதுவரை காவிரிநீர் வரவில்லை.

நடவு பணி

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சீர்காழி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதை பயன்படுத்தி வைத்தீஸ்வரன்கோவில், அட்டக்குளம், நைனார்தோப்பு, நல்லான்சாவடி, எடக்குடி, வடபாதி, காரைமேடு, தெற்கிறுப்பு, மருவத்தூர், சட்டநாதபுரம், பனமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்தால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்று பொதுமக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். 

மேலும் செய்திகள்