சூலூர் அருகே நொய்யல் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

சூலூர் அருகே நொய்யல் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2018-11-03 22:30 GMT
சூலூர்,

கோவையை அடுத்த சூலூர் செலக்கரச்சல் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி உஷா ராணி. செந்தில் ஏற்கனவே இறந்துவிட்டார். உஷா ராணி கட்டிட வேலைக்கு சென்று தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். இவர்களுக்கு குணசேகரன் (வயது 12), ரஞ்சித் (10) என்ற 2 மகன்கள் இருந்தனர். குணசேகரன் செலக்கரச்சல் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பும், அதே பள்ளியில் ரஞ்சித் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று உஷாராணி கட்டிட வேலைக்கு சென்றார். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ரஞ்சித், குணசேகரன் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது அண்ணன், தம்பி இருவரும் தங்களின் நண்பரான கரடிவாவியை சேர்ந்த கணேசபாண்டி என்பவரது மகன் திருமலை வாசன் (13) என்பவருடன் சேர்ந்து செலக்கரச்சலில் இருந்து பஸ் மூலம் ராவத்தூர் சாலையில் உள்ள நொய்யல் ஆற்று பகுதிக்கு சென்றனர்.

அங்கு ஆற்றில் இறங்கி அவர்கள் மீன்பிடித்ததாக தெரிகிறது. பின்னர் குணசேகரன், ரஞ்சித் இருவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர். திருமலைவாசன் பயத்தில் கரையோரத்தில் நின்று கொண்டிருந்தார். ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த அண்ணன், தம்பி இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருமலைவாசன் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று சத்தம் போட்டார். சிறுவனின் சத்தத்தை கேட்டு, அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சோமனூரை சேர்ந்த குமரேசன், சிவசந்திரன் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள், ஆற்றில் இறங்கி சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் மாணவர் ரஞ்சித்தை, குமரேசன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். ஆனால் கரை ஏற வழியில்லாததால் அங்கிருந்த புதரை பிடித்துக்கொண்டு தத்தளித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையில் குணசேகரன் தண்ணீரில் மூழ்கினார்.

இது குறித்த தகவலின் பேரில் சூலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீனவர்கள் உதவியுடன் பரிசலில் சென்று மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மறுபக்க கரையில் தத்தளித்துக்கொண்டிருந்த குமரேசன், மாணவர் ரஞ்சித் ஆகியோரை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சூலூர் தாசில்தார் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர். மேலும் அங்கு 108 ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டது. நொய்யல் ஆற்றில் மாணவர் மூழ்கியது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவன் குணசேகரன் பிணமாக மீட்கப்பட்டார். அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்