மோசமான வானிலை: புதுவையில் 2-வது நாளாக விமான சேவை ரத்து
மோசமான வானிலை காரணமாக புதுவையில் நேற்று 2-வது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
புதுச்சேரி,
புதுவையில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த 3 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் இருந்து புதுவை வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக புதுவையில் தரை இறங்க முடியவில்லை. இதனால் அந்த விமானம் புதுவையில் இருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. விட்டு விட்டு மழை பெய்து வந்தது. மோசமான வானிலையின் காரணமாக புதுவையில் நேற்று 2-வது நாளாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஹைதராபாத், பெங்களூருவில் இருந்து புதுவைக்கு வரும் விமானங் களும், புதுவையில் இருந்து செல்லும் விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன.
இதனால் புதுவையில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகள் சிலர் சென்னையில் இருந்து செல்லும் வகையில் தங்கள் பயணத்தை மாற்றிக்கொண்டனர். சிலர் தங்கள் முன்பதிவை ரத்து செய்து விட்டு பஸ்களில் பயணம் செய்தனர். மேலும் சில பயணிகள் இன்று (சனிக் கிழமை) பயணம் செய்யும் வகையில் தங்கள் பயண திட்டத்தை மாற்றிக்கொண்டனர்.