மாணவியை மானபங்கம் செய்த டியூசன் ஆசிரியருக்கு 5 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

10-ம் வகுப்பு மாணவியை மானபங்கம் செய்த டியூசன் ஆசிரியருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-11-02 22:58 GMT
மும்பை,

மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 15 வயது மாணவிக்கு அந்த கட்டிடத்தை சேர்ந்த 53 வயது ஆசிரியர் ஒருவர் டியூசன் வகுப்பு எடுக்க அவளது வீட்டிற்கு வருவது வழக்கம். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் வீட்டில் மாணவிக்கு டியூசன் வகுப்பு நடந்தது. அப்போது வீட்டில் மாணவியின் பெற்றோர் வெளியே சென்று இருந்தனர். மாணவிக்கு உதவியாக பாட்டி மட்டும் வீட்டில் இருந்து உள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய டியூசன் ஆசிரியர் மாணவியை கட்டிப்பிடித்து மானபங்கம் செய்தார்.

இதனால் பயந்து போன மாணவி சத்தம் போட்டு உள்ளாள். இவளது சத்தம் கேட்டு ஓடி வந்த பாட்டி சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோரை வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் அவர்கள் டியூசன் ஆசிரியரை பிடித்து வெர்சோவா போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு டியூசன் ஆசிரியருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்