தரமற்ற இனிப்பு வகைகளை தயாரித்து விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை
தரமற்ற இனிப்பு வகைகளை தயாரித்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள், பலகாரங்கள், கேக்வகைகள், பேக்கரி பண்டங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்கள் கட்டாயம் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பண்டிகை கால உணவுப்பண்டங்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பண்டங்கள் மீது தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப்பொருளின் பெயர், சைவ அல்லது அசைவ குறியீடு, தயாரிக்கப்பட்ட தேதி, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம், காலவதியாகும் தேதி ஆகியவை குறித்த விபரச்சீட்டினை கட்டாயம் பொருத்த வேண்டும்.
உணவுப்பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் விற்பனை செய்ய வேண்டும். உணவுப்பண்டங்களில் கலப்பட பொருட்களை உபயோகிப்பது, அளவுக்கு அதிகமான கலர் மற்றும் உணவு கலவைகளை பயன்படுத்துவது, தரமற்ற முறையில் தயார் செய்வது ஆகியவை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உணவுக்கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்படும்.
பொது மக்கள் பண்டிகை காலங்களில் உணவு பாதுகாப்புத்துறை பதிவு உரிமம் பெற்ற கடைகள் மற்றும் நிறுவனங் களில் மட்டுமே உணவுப்பண்டங்கள் மற்றும் பலகாரங்கள் வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். உணவு பொருட்கள், பண்டங்கள் மற்றும் பலகாரங்கள் தொடர்பான புகார்கள் குறித்து 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ அல்லது மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலகத்தில் நேரிலோ புகார் செய்யலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.