சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற டாஸ்மாக் ஊழியர் பலி
நாகூர் அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியர் பலியானார்.
நாகூர்,
நாகை மாவட்டம் திருமருகல் தேவங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் சுப்பிரமணியன். இவர் காக்கழனி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுப்பிரமணியன் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாகூரை அடுத்த ஒக்கூர் அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு சுப்பிரமணியன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.