நாகையில் பரவலாக மழை 2-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

நாகையில் பரவலாக மழை பெய்தது. இதனால் 2-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2018-11-02 23:00 GMT
நாகப்பட்டினம், 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதனால் நாகையில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக நாகையில் காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. மேலும் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை வாங்க வந்த பொதுமக்கள் மழையில் நனைந்து அவதிப்பட்டனர்.

மழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் நேற்று 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்களது படகுகளை கடுவையாற்று கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் மழை தொடர்ந்து பெய்தால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேபோல் நாகை மாவட்டம் திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, கீழையூர், தலைஞாயிறு, வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

மேலும் செய்திகள்