கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. நாளை (சனிக்கிழமை) பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

Update: 2018-11-02 00:07 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காலியாக உள்ள சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இடைத்தேர்தலை பா.ஜனதா கட்சி தனித்தும், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்தும் எதிர்கொள்கிறது. இதனால் சிவமொக்கா, மண்டியா, ராமநகர் ஆகிய 3 தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் வேட்பாளர்களும், பல்லாரி, ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.

5 தொகுதிகளிலும் மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ராமநகர் தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதாவும், சிவமொக்காவில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவும், பல்லாரியில் ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தாவும் போட்டியிடுகிறார்கள். இதனால் அந்த 3 தொகுதிகளிலும் நட்சத்திர தொகுதிகளாக இருப்பதுடன், அங்கு வெற்றி பெறுவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளிலும் முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, முக்கிய தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கடந்த சில நாட்களாக சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்றுடன் பிரசாரத்திற்கு கடைசி நாள் என்பதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். மண்டியா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் சிவராமே கவுடாவுக்கு ஆதரவாக தேவேகவுடாவும், ஜமகண்டி தொகுதியில் ஆனந்த் நியாமகவுடாவுக்கு ஆதரவாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும் பிரசாரம் செய்தார்கள்.

சிவமொக்கா தொகுதியில் ராகவேந்திராவுக்கு எடியூரப்பா, ஈசுவரப்பா ஆகியோர் ஆதரவு திரட்டினார்கள். பல்லாரி தொகுதியில் சாந்தாவுக்கு ஆதரவாக ஸ்ரீராமுலுவும், காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பாவுக்கு மந்திரி டி.கே.சிவக்குமாரும் நேற்று தீவிர பிரசாரம் செய்தார்கள். இடைத்தேர்தல் நடைபெற உள்ள 5 தொகுதிகளுக்கான பகிரங்க பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளதால், அங்கு ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. அந்த 5 தொகுதிகளிலும் 6,453 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெண்களுக்காக 57 ‘பிங்க்‘ வாக்குச்சாவடிகளும் அடங்கும்.

இடைத்தேர்தலில் 18 ஆயிரத்து 260 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 8,922 வி.வி.பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் 35 ஆயிரத்து 495 ஊழியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 5 தொகுதிகளிலும் 1,502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் தேர்தல் பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 35 கம்பெனிகள் கர்நாடகத்திற்கு வந்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் 5 தொகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ராமநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் எல்.சந்திரசேகர் போட்டியில் இருந்து நேற்று விலகி இருப்பதாக அறிவித்துள்ளதால், அந்த தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் அனிதா குமாரசாமி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. 

மேலும் செய்திகள்