கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வருமான உத்தரவாத திட்டம்
கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வருமான உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து விடுதலை நாள் விழா உரையாற்றும் போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி மக்களின் வீரம் செறிந்த போராட்டத்தின் காரணமாக 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி நாம் விடுதலை பெற்று இந்தியாவோடு இணைந்தோம். இந்த விடுதலை நாளைக் கொண்டாடும் வகையில் இங்கே மூவர்ண கொடியை ஏற்றி மகிழ்கிறோம். புதுச்சேரியின் விடுதலைக்காக பாடுபட்டவர்களுக்கு எனது வீர வணக்கங்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
விடுதலை அடைந்த நாள் முதல் இன்று வரை புதுச்சேரி பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து தென்னிந்தியாவிலேயே புதுச்சேரி ஒரு கல்விக் கேந்திரமாக மாறி இருக்கிறது.
வேளாண்துறையை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்ததோடு உழவர் உயர்வுக்கான பல உன்னத திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
விவசாய வேலையாட்கள் பற்றாக்குறையை எந்திரமாக்குதல் மூலம் சமாளிக்கவும், உயர் தொழில்நுட்ப இடுபொருட்கள் மானிய விலையில் கிடைக்கச் செய்யவும், விவசாயப் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை பெருக்கவும் நடப்பாண்டில் வேளாண் துறையின் திட்டங்களுக்கான செலவுக்கு ரூ.89கோடியே 83 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வருமான உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பண்ணை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தேனும் நானும் என்ற பெயரில் அனைத்து கிராமங்களிலும் தேனீ வளர்ப்புத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதில் ஈடுபடும் மகளிருக்கு வங்கிக்கடன் மற்றும் 40 சதவீத மானியத்துடன் உபகரணங்கள் மற்றும் பயிற்சி அளிக்கப்படும். உற்பத்தி செய்யும் தேன் மற்றும் இதர பொருட்களை கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் மூலம் விற்பனை செய்திட வழிவகை செய்யப்படும்.
பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பசுந்தீவனம் உற்பத்தி செய்யப்படும். தீவன பயிர் உற்பத்திக்கு வழங்கப்படும் அறுவடைக்கு பிந்தைய பொருளட்டு மானியம் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். தீவனப் புல்வகைகளை பாண்லே நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பால் உற்பத்தியை பெருக்க தேவைப்படும் அசோலா வளர்க்க சாகுபடிக்கு பிந்தைய மானியமாக ரூ.750 வீதம் 1500 பெண்களுக்கு வழங்கப்படும்.
கிராமப்புற பெண்கள், சுய வேலைவாய்ப்பு பெறும் வகையில் தோட்டங்களில் காய்கறி விதைகள் உற்பத்தி செய்ய ஊக்குவித்து, அவர்கள் உற்பத்தி செய்யும் விதைகளை வேளாண்துறையே மானிய விலை வினியோகத் திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்து வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண் திறன் வளர்ப்பு பயிற்சிகளில் பங்குபெறும் மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.150 வீதம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெறக்கூடிய பயிர்க்கடனை, தவணை தவறாமல் செலுத்தும் விவசாயிகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள 3 சதவீத வட்டி தள்ளுபடியுடன், மீதமுள்ள 4 சதவீதத்தை மாநில அரசு மானியமாக வழங்கி, விவசாயிகள் வட்டியில்லாத கடன் பெறவழிவகை செய்யப்படும். நெல்லுக்கு மாற்றாக கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, சாமை, வரகு ஆகிய பயிர்களுக்கு சாகுபடிக்கு பிந்தைய பொருளட்டு மானியமாக ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, மீன், கோழி வளர்ப்பு மற்றும் பண்ணைக்காடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஒவ்வொரு தொகுதிக்கும் 5 பேருக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம். நீர்வள ஆதாரங்களை பாதுகாப்பதற்கு தேவையான நிதி ஆதாரங்களை பெருக்க தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களிடமிருந்து தண்ணீருக்கான உபயோக கட்டணம் வசூலிக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.