ஊட்டியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-01 22:00 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு பொறுப்புபடி வழங்க அரசாணை இருந்தும் 2015-ம் ஆண்டு முதல் பொறுப்புப்படி வழங்கவில்லை. இந்த நிலுவை தொகையை வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கும் பணி மூப்பின் அடிப்படையில் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு செலவீட்டு தொகையை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பிற அரசு துறை ஊழியர்களுக்கு வழங்குவது போல் 9 மாத மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் மற்றும் சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் கடந்த மாதம் முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி, கூடலூரில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

இந்த நிலையில் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஊட்டி ஏ.டி.சி. திடலில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றிய தலைவர் ஷீலா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி சங்க துணை தலைவர் சுப்பிரமணி போராட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் ரமேஷ், ராஜேந்திரன் உள்பட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் இன்பநாதன் முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்க தலைவர் சந்திரபோஸ், அரசு ஊழியர் சங்க தலைவர் சலீம், ஊரக வளர்ச்சி துறை சங்க தலைவர் சுரேஷ், தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் ராஜசேகர் ஆகியோர் பேசினர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி தங்கராஜ், சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகி சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்