தண்டையார்பேட்டையில் சுனாமி குடியிருப்பு மாடியில் கஞ்சா செடி வளர்ப்பு 4 பேர் கைது

தண்டையார்பேட்டையில் சுனாமி குடியிருப்பின் மாடியில் கஞ்சா செடி வளர்த்ததாக 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-01 23:15 GMT
பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் மர்மநபர்கள் சிலர், சந்தேகப்படும்படியாக அடிக்கடி வந்து செல்வதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார், தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(வயது 22) மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் என 4 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், 4 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில், மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரும் அந்த பகுதியில் தனியாக நடந்து செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

இந்த கஞ்சா செடியை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வளர்த்து வந்து உள்ளார். தற்போது அவர், ஒரு குற்ற வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். எனவே அந்த கஞ்சா செடியை இவர்கள் தினமும் பராமரித்து வருவது விசாரணையில் தெரிய வந்தது.

இதுபற்றி தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் மணிகண்டனை புழல் சிறையிலும், மற்ற 3 சிறுவர்களையும் சென்னை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் அடைத்தனர்.

மேலும் செய்திகள்