வியாசர்பாடியில் போலீஸ் உதவி மையம் திறப்பு விழா திடீர் ரத்து பொதுமக்கள் ஏமாற்றம்

வியாசர்பாடியில் போலீஸ் உதவி மையம் திறப்பு விழா ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2018-11-01 22:30 GMT
பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சர்மா நகர், சாஸ்திரி நகர், பி.வி.காலனி ஆகிய பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம், வழிப்பறி என பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெற்று வருகிறது.

இதனை கண்காணித்து தடுக்கும் வகையில் அந்த பகுதியில் நிரந்தரமாக போலீஸ் கண்காணிப்பதற்காக சாஸ்திரி நகர் 16-வது தெருவில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து நிதி திரட்டி எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி மையம் புதிதாக கட்டப்பட்டது.

இந்த போலீஸ் உதவி மைய திறப்பு விழா நேற்று காலை நடைபெற இருந்தது. இதை கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் திறந்து வைக்க இருந்தார். இதற்காக அவரை வரவேற்று பொதுமக்கள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது.

மேலும் அந்த பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில், அதன் மாவட்ட செயலாளர் சந்தானம் மற்றும் மாநில பொறுப்பாளர்களை வரவேற்று ‘கட்-அவுட்’ மற்றும் ‘பேனர்’கள் அந்த சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டு இருந்தது. அவை அனுமதிஇன்றி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதை கண்ட எம்.கே.பி. நகர் போலீசார் அனுமதி இன்றி வைக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்ற ‘பேனர்’களை அகற்றினர். இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ‘பேனர்’களை போலீசார் அகற்றி விட்டனர்.

இதையடுத்து போலீஸ் உதவி மையம் திறப்பு விழாவுக்காக அந்த பகுதி பொதுமக்கள், ரஜினி ரசிகர்கள் திரண்டு வந்து நீண்டநேரம் காத்து இருந்தனர். ஆனால் நீண்டநேரம் ஆகியும் போலீஸ் உதவி மையத்தை திறந்து வைக்க கூடுதல் கமிஷனர் தினகரன் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும் வரவில்லை. விழாவில் பங்கேற்க வருவதாக கூறப்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் வரவில்லை.

இதனால் போலீஸ் உதவி மைய திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது. விழாவில் கலந்துகொள்ள வந்த பொதுமக்கள், ரஜினி ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். போலீஸ் உதவி மையம் திறக்கப்படாமல் தொடர்ந்து பூட்டியே கிடக்கிறது.

மேலும் செய்திகள்