ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
குடியாத்தம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 4 பேருக்கு வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர்,
குடியாத்தம் அருகே உள்ள சாம்பரிஷி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், இவருடைய மகன் சார்லஸ் (வயது 23) ஆட்டோ டிரைவர். அதே கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு கடந்த 24.4.2014 அன்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவரை ஆட்டோ டிரைவர் சார்லஸ் தனது ஆட்டோவில் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.
அழிஞ்சிக்குப்பம் காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன்கள் ராஜா என்கிற உதயவாணன் (22), பாபு என்கிற தென்னரசு (23), பட்டாபி மகன் தினேஷ் (23), மோகன் மகன் ராஜா (25) ஆகியோர் அழிஞ்சிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சார்லஸ் ஓட்டிவந்த ஆட்டோ அவர்கள் மீது உரசியது. இதனால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இந்த நிலையில் கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு மீண்டும் அதே ஆட்டோவில் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது அவர்களை தினேஷ் உள்பட 4 பேரும் சேர்ந்து வழிமறித்து ஆட்டோ டிரைவர் சார்லசை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சார்லஸ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதுகுறித்து மேல்பட்டி போலீசில் கார்த்திக் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ், ராஜா, உதயவாணன், தென்னரசு ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி எஸ்.குணசேகரன் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
தினேஷ் உள்பட 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தினேஷ், ராஜா, உதயவாணன் ஆகிய 3 பேருக்கு தலா ரூ.3 ஆயிரமும், தென்னரசுக்கு ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் அ.கோ.அண்ணாமலை ஆஜரானார்.