ராமநாதபுரம் அருகே: டாஸ்மாக் கடை வாசலில் இறந்து கிடந்த வாலிபர் அடித்துக் கொலையா?
ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடை வாசலில் வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 36). இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ராமநாதபுரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள சி.டி. கடையில் வேலை பார்த்து வந்த இவர், பின்னர் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்து வந்தாராம். இந்த நிலையில் நேற்று காலை காரிக்கூட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை வாசல் அருகில் தலையில் படுகாயங்களுடன் சதீஷ்குமார் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் அண்ணன் ராமநாதபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த சசிக்குமார்(44) என்பவர் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அவர் பிணமாக கிடந்ததால் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.