கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சத்துணவு ஊழியர்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சத்துணவு ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-11-01 22:45 GMT
பெரியபாளையம்,

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மணி நேரம் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஒன்றிய தலைவர் சிவாஜி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிவலிங்கம், மாவட்ட நிர்வாகி மீராகண்ணன், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவா கண்டன உரையாற்றினார். முடிவில் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க ஒன்றிய தலைவர் முரளிதரன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் முகமது உசேன் முன்னிலையில் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட துணைத்தலைவர் பாபு, ஒன்றிய செயலாளர் பரந்தாமன், மாநில தமிழ்நாடு முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி கிளை சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியத்தலைவர் பேபி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் முருகன், பொருளாளர் திலகவதி, மாவட்ட துணைத்தலைவர் நாகராசன், ஒன்றிய துணைத்தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் செய்திகள்