ரூ.3,500 போனஸ் வழங்கக்கோரி கொட்டும் மழையில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
ரூ.3,500 போனஸ் வழங்கக்கோரி நாகையில் கொட்டும் மழையில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் மோகன், நாத்திகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் கலந்துகொண்டு பேசினார்.
கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ. 15 ஆயிரத்து 700 வழங்கவேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், போன்று கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் கணக்கீடு செய்யவேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதை போல் ரூ.3 ஆயிரத்து 500 போனஸ் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் போது மழை வந்ததால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.